குல்பர்க் சொசைட்டி படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் சார்பாக…

சக இந்தியர்களே
இன்று அவை அனைத்தும் என் நினைவுக்கு வருகின்றன
இது சற்றே நீளமான பதிவு. இதை படிக்க உங்களுக்கு நேரமிருக்குமா என்றெனக்கு உறுதியாக தெரியவில்லை.
இப்போது பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி. 2002 ஆம் ஆண்டு. கோத்ரா-வில் எரிக்கப்பட்ட கர சேவகர்களின் மரணத்திற்கு பழிதீர்க்க குல்பர்க் சொசைட்டியை இன்று ஆயிரக்கணக்கான குண்டர்கள் சுற்றி வளைத்திருக்கிறார்கள். வாள்களைக் கொண்டு தாக்குதல் நடத்துகிறார்கள். வீட்டு முற்றத்திலேயே வைத்து அக்தரையும் அவனது தந்தையையும் தலையை வெட்டி கொன்றிருக்கிறார்கள். அந்த வளாகத்தின் நடுவிலிருக்கும் என் தந்தையின் வீட்டை நோக்கி மக்கள் பயத்தில் ஓடி வருகின்றனர். சுற்றியிருக்கும் மற்ற சொத்துக்களை ஏற்கனவே இந்தக் கும்பல் சேதப்படுத்தி விட்டது. என் அண்டை வீட்டவரின் மகளை வீட்டை விட்டு வெளியே இழுத்து அவள் மீது பாலியல் வன்முறை நிகழ்த்துகின்றனர். அதை அந்த பெண்ணின் அம்மா அனுமதிக்க மறுக்கிறாள். அவள் அந்த முயற்சியில் வெற்றி பெறுவதாக தெரியவில்லை. சில குழந்தைகள் வெளியில் ஓடி கொண்டிருப்பதை என்னால் பார்க்க்க முடிகிறது. அவர்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்ற்ப்பட்டு அந்த வலியில் அவர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதே குழந்தைகள் தான் காலை உணவுக்கு பின்பு அந்த திறந்த வெளியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்கள். அம்மி (சாக்கியா நசீம் ஜாஃப்ரி- என் அம்மா) தப்பித்து வர முடிந்த பெண்களோடும், குழந்தைகளோடும் வீட்டின் இரண்டாவது மாடியில் ஒளிந்து கொண்டிருக்கிறார். எங்கள் வீட்டின் மீது நாலா பக்கமிருந்தும் கற்கள் எறியப்படுகின்றன. சுற்று வட்டாரத்திலிருக்கும் இஸ்லாமியர்கள் ஏறக்குறைய எல்லாரும் கொல்லப்பட்டோ அல்லது காயம்பட்டோ கிடக்கின்றனர். தப்பிப் பிழைத்தவர்கள் எங்கள் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். எங்கள் வீட்டை சூழ்ந்துள்ள குண்டர்கள் தீ பந்துகளை தூக்கி எறிந்து கொண்டே, கேஸ் சிலிண்டர்களை வீட்டினுள் தள்ளி விடுகின்றனர். அப்பா (அஹ்சான் ஜாஃப்ரி) இப்போது அநேகமாக வீட்டு முற்றத்தில் நின்றுகொண்டு பெண்களையும், குழந்தைகளையும் விட்டு விடுமாறு கெஞ்சி கொண்டிருப்பார். அவரை இந்நேரம் இழுத்து வெளியே போட்டிருப்பார்கள். தான் பிழைக்கப்போவதில்லை என்பது அவருக்கு தெரியும்.
அங்கு நிலவிய குழப்பத்தில் தனக்கு உதவியாக வீட்டில் வேலை செய்யும் லீலா பென்னும் தன்னுடன் மாடியில் வந்து ஒளிந்து கொண்டிருந்ததை என் அம்மி(அம்மா) இப்போது தான் கவனிக்கிறார் தன்னோட சேர்ந்து சாக வேண்டிய தேவை லீலா பென்னுக்கு இல்லை என்பதை இந்த குழப்பத்திலும் கூட உணர்ந்தவளாய், அம்மி இன்னும் நான்கு பெண்களை உடன் அழைத்துக் கொண்டு லீலா பென்னையும் அழைத்துக் கொண்டு வந்து பால்கனியில் நின்று கீழே தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த குண்டர்களை பார்த்து கை கூப்பி கெஞ்சுகிறாள். “லீலா பென் ஒரு இந்து. அவளை மட்டுமாவது போக விடுங்கள்” என்று. அந்த நான்கு பெண்களுடன் இணைந்து கைதாங்கலாக லீலா பென்னை தண்ணீர் தொட்டியின் மீது இறக்குகிறார்கள். உயிருக்கு பயந்து இரண்டாம் மாடியில் ஒளிந்து கொண்டிருந்தவர்களை கண்டதும் அவர்களை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர் குண்டர்கள். பெண்கள் அனைவரும் மீண்டும் உள்ளே ஓடிச்சென்று இரும்புக் கதவை தாழிட்டு கொள்கின்றனர். இதற்குள் நெருப்பு இரண்டாம் மாடிக்கும் பரவுகிறது. அவர்கள் தப்பிக்க வழியில்லை.
இத்தனை இரக்கத்துடன் இந்தியாவில், என் அம்மியைப் போன்று இன்னும் பலர் இருக்கின்றனர். பிப்ரவரி 27, 2000 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை குஜராத்தில் இழக்கப்பட்டு வரும் அத்தனை உயிர்களுக்காகவும் வருந்துவோம். வெறுப்பு அரசியலின் மூலம் ஆட்சியைப் பிடித்திருக்கும் இன்றை மத்திய அரசின் வெற்றிகரமான சோதனை முயற்சி இது.

11665749_10205708212878917_7863732221044771871_n

Advertisements

36 வயதினிலே

இதைப் பற்றி எழுதுவதற்கு முன் இரண்டு விஷயங்களை சொல்லனும்.
1. நான் How Old are You பாக்கலை.
2. திரை மொழியாவோ, craftஆவோ இந்த படத்தையோ, எந்த பட்த்தையுமோ பாக்குறதுக்கு இன்னும் கத்துகிட்டிருக்கேன்ற முறையில கதை சொல்லல் கூட இல்லை, வெறும் கதையின் அடிப்படையில் மட்டுமே இந்த படத்தைப் பற்றி எழுதுறேன்.
படத்துல என்னை வெகுவா கவர்ந்தது, படத்தில் வரும் மூன்று பெண் கதாபாத்திரங்களுக்கும் வசந்திக்குமான உறவு தான். குடும்பத்தையும் அதன் மூலமாக சாதிய support systemகளையும் மட்டுமே பாதுகாப்பான, நம்பிக்கை தரக்கூடிய உறவுகளாக காட்டிவரும் சினிமாவில், ஒரு பெண்ணுக்கு தன் குடும்பத்தை தாண்டி தோழிகளாக நம்பிக்கைத் தரக் கூடிய இத்தனை உறவுகள் இருக்க முடியும் என்பதை காட்டியதற்கே இந்த படத்தை பார்க்க வேண்டும். கல்லூரியில் உடன் படித்த தோழியும், அலுவலகத்தில் உடன் பணிபுரியும் தோழியும், இட்லி விக்கும் அம்மாவும், ஒரு பெண்ணுக்கு இத்தனை உறுதுணையாகவும், எந்த பலனும் எதிர்ப்பாராமலும் இருந்து விட முடியுமா என்றால், முடியும்! அப்படி தானே குடும்ப முறைகளுக்கு வெளியிலிருக்கும் பெண்களாகிய நாங்களெல்லாம் பிழைத்து வருகிறோம். இந்த உண்மையை உணர்ந்தால், இன்றிருக்கும் சூழலில் பல பெண்கள் தங்களை ஒடுக்கும் குடும்பச் சூழல்களை விட்டு தெம்புடன் மீறிவந்து விட முடியும். அந்த நம்பிக்கையை அனைத்து தரப்பு பெண்கள் மத்தியிலும் இந்தப் படம் கொண்டு சேர்த்திருக்கும். இரண்டு பெண்களென்றாலே போட்டியும், பொறாமையும், சுயநலமும் மட்டுமே இருக்கும் என்று மீண்டும், மீண்டும் நம் மனங்களில் விதைக்கப்பட்டு வரும் சூழலில் ஆர்பரிப்பற்ற, இயல்பான இந்த நட்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மாமியாருக்கும்- மருமகளுக்குமான உறவும் அப்படிதான்.

வசந்தியை அந்த இரண்டரை மணிநேரத்தில் பெரும் சாதனையாளராக காட்டிய க்ளீஷே உறுத்துகிறது தான், ஆனால், ஒற்றைப் பாடலில் பணக்காரர்களாகிய ஹீரோக்களையும், இந்திய எல்லையில் தமிழ் பேசி “நாட்டைக் காப்பாற்றிய” ஹீரோக்களையும் பார்த்து தானே வளர்ந்திருக்கிறோம். இன்றும் அதே இழவை தான பாக்க வேண்டியதிருக்கு. அதனால் சாதிக்கும் பெண்கள் பற்றிய படங்கள் cliche-வில் தொடங்கி தான் தீர வேண்டிய தேவையிருக்கிறது. ஏனா நமககு சாதனைன்னா இமாலய சாதனையா தான் இருக்கனும், அதுக்கு ஒரு அடி குறைஞ்சாலும் நாம சாதனையா அத பாக்க மாட்டோம். அதுனால President, Collector, Governor-ன்னு தமிழ் சினிமா இன்னும் pretensions இல்லாம காட்ட தெரியாத பல பதவிகள்ல இருக்கிறவங்கள கூப்பிட்டு வந்து காமெடி பண்றாங்க.

மற்றபடி தியேட்டர்-ல உக்காந்து படம் பாக்குறப்போ கூட படம் பார்க்கிற ”குடும்ப வாழ்க்கையில்” ஒரு அங்கமாக, வசந்தியாக இருக்கும் பெண்களோட ரியாக்ஷன் தான் இந்த மாதிரி படம் ஏன் அவசியமுன்னு புரிய வைக்குது. அரசு அலுவலகத்துல அவளோட அன்றாட போட்டிகளோட சேர்ந்து சிரிக்குறதையும், கணவனோட மனசாட்சியே இல்லாத வசைகளுக்காக அவளோட தங்களையும் அடையாளம் கண்டு வருந்துறதையும் வெறும் சுயசிந்தனையற்ற பார்வையாளர்களா மட்டுமே அவங்க செய்யலை. அதை ஏதோ ஒரு விதத்துல அனுபவிக்கிறவங்களாகவும், அனுபவிக்குறவங்கள பாக்குறவங்களாகவும் தான் react பண்றாங்க. குறிப்பா அப்பாவும், பெண்ணும், Ireland கிளம்புற செய்திய மனைவியிடம் சொல்லும்போது “ஆமா!” “ம்க்கும்” என்று அத்தனை சலிப்பான வெளிப்பாடுகள் தியேட்டரில கேக்குது. எவ்ளோ டார்சர் பண்ணியிருந்தா பெண் மக்கள் இவ்ளோ டென்ஷனாகி ரியாக்ட் பண்ணுவாங்க. Over all, I liked to watch the film.
jyothika-in-36-Vayadhinile-Movie

அரசியலற்ற அறிவு ஜீவிகள் – ஓட்டோ ரெனே காஸ்டிலோ

ஒரு நாள்

என் நாட்டினுடைய அரசியலற்ற அறிவு ஜீவிகள்

எங்களுடைய மிகச் சாதாரண மக்களால்

கேள்வி கேடகப்படுவார்கள்

தனிமையில் சிறியதாக எரிந்து முடியும்

இனிய நெருப்பைப் போலத்

தங்களுடைய நாடு மெதுவாக அழிந்த போது

அவர்கள் என்ன செய்தார்கள் என்று வினவப்படுவார்கள்

அவர்களுடைய உடைகளைப் பற்றியும்

மதிய உணவிற்கு பிறகு

அவர்கள் எடுக்கும் சிறு துயில் பற்றியும்

யாரும் கேட்க மாட்டார்கள்

“வெறுமையின் வடிப்புடனான” அவர்களின்

பலனற்ற மல்லாடல்களைப் பற்றி யாரும் தெரிந்து கொள்ள விரும்ப மாட்டார்கள்

அவர்களின் உயரிய பொருளாதார கல்வியறிவை

கண்டு கொள்ள மாட்டார்கள்

கிரேக்கப் புராணங்களைப் பற்றியோ

அவர்களுள் ஒருவர் கோழையின் மரணத்தை மரணிக்க தொடங்கும் போது

ஒவ்வொருவருக்கும் அவர்கள் மீதே ஏற்படும் அருவருப்பைப் பற்றியோ

கேட்கப்பட மாட்டார்கள்

முழுமையடைந்த வாழ்க்கையின் நிழலிலிருந்து பிறந்த அவர்களின்

அசட்டுத்தனமான நியாயங்களைப் பற்றி

ஒன்றுமே கேட்கப்பட மாட்டாது

அன்றைக்கு எளிய மக்கள் வருவார்கள்

அரசியலற்ற அறிவு ஜீவிகளின் புத்தகங்களிலும், கவிதைகளிலும்

இடம்பெறாத

ஆனால் அவர்களுக்கு அன்றாடம்

ரொட்டியும், பாலும்

கேக்கும், முட்டையும்

வினியோகித்த

அவர்களின் கார்களை ஓட்டிய

அவர்களின் நாய்களையும், பூந்தோட்டங்களையும் பராமரித்த

அவர்களின் கீழ் வேலை செய்த

மக்கள் கேட்பார்கள்:

“ஏழைகள் வேதனைப்பட்டு

மென்மையும் உயிரும் அவர்களை

விட்டு வெளியேறிய போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று

என்னுடைய இனிய நாட்டின் அரசியலற்ற அறிவு ஜீவிகளே

உங்களால் பதில் சொல்ல முடியாது

மௌனம் ஒரு கழுகைப் போல் உங்கள் குடலைத் தின்னும்

உங்கள் துன்பமே உங்களின் உயிரை எடுக்கும்

அவமானத்தினால் நீங்கள் ஊமையாகி நிற்பீர்கள்

தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்ட இரானிய பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம்

தன்னை பலாத்காரம் செய்ய வந்த காவல்துறை அதிகாரியை கொலை செய்ததாக இந்த பெண் கூறியிருந்தார். அந்தக் குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் முடிவு செய்து, சனிக்கிழமையன்று நிறைவேற்றவும் செய்தது. அதற்கு முன் அவர் தன் அம்மாவிற்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு.

அன்புள்ள ஷோலே,

கிசாசை (இரானிய தண்டனைச் சட்டம்) நான் சந்திக்க வேண்டிய நாள் இது தான் என்று இப்போது தான் அறிந்து கொண்டேன். என் வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசி தாளை நான் அடைந்ததை நீயே என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று எனக்கு வேதனையாக இருக்கிறது.  எனக்கு தெரிய வேண்டும் என்று உனக்கு தோன்றவில்லையா? நீ சோகமாக இருப்பது எனக்கு அவமானமாக இருக்கிறது தெரியுமா? உன்னுடைய கையையும், அப்பாவின் கையையும் நான் முத்தமிடும் வாய்ப்பை ஏன் நீ பயன்படுத்திக் கொள்ளவில்லை?

இந்த உலகம் என்னை 19 வருடம் வாழ அனுமதித்திருக்கிறது. அந்த  துர் இரவில் நான் தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என் உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் எறியப்பட்டிருந்திருக்கும். சில நாட்கள் கழித்து என் உடலை அடையாளம் காண உன்னை கரோனரின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். அப்போது தான் நான் பலாத்காரம் செய்யப்பட்டதையும் நீ அறிந்திருப்பாய். என்னைக் கொன்றவனை என்றைக்குமே கண்டுபிடித்திருக்க முடியாது. அவர்களிடம் உள்ளது போன்ற செல்வமும், அதிகாரமும் நமக்கில்லையே. அதன் பிறகு அவமானத்தோடும். வலியோடும் உன் வாழ்வை நீ தொடர்ந்திருப்பாய். அப்புறம் சில ஆண்டுகளில் இந்த வலியினால் நீ இறந்து போயிருந்திருப்பாய். அத்தோடு எல்லாம் முடிந்திருக்கும்.

ஆயினும், சபிக்கப்பட்ட அந்த தாக்குதலால் கதை மாறிப்போனது. என் உடல் சாலையில் தூக்கியெறியப்படவில்லை மாறாக, எவின் சிறைச்சாலையின் தனிமை அறைகளிலும் இப்போது ஷாஹர்- ஈ- ரேயின் கல்லறை போன்ற சிறைச்சாலைகளிலும் எறியப்பட்டிருக்கிறது. ஆனால் விதிக்கு வழிவிட்டு, புலம்புவதை நிறுத்து. மரணம் வாழ்க்கையின் முடிவல்ல என்பதை நன்கு அறிந்தவள் நீ.

ஒவ்வொருவரும் இந்த உலகத்திற்கு ஒரு அனுபவத்தை சம்பாதிக்கவும், ஒரு பாடத்தை பயிலவும் வருகிறார்கள். ஒவ்வொரு பிறப்பிலும் அவர்களுக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்படுகிறது என்று நீ தான் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறாய். சில நேரங்களில் ஒருவர் போராடவும் வேண்டும் என நான் கற்றுக் கொண்டேன். தள்ளு வண்டி ஓட்டுபவர் தன்னை ஒருவன் அடிப்பதை தடுத்தார் என்றும், ஆனாலும் அடித்தவன் தள்ளு வண்டி ஓட்டுபவரின் முகத்திலும் தலையிலும் தொடர்ந்து அடித்ததால் அவர் இறந்ததையும் கூறினாய். இறந்து போவோமென்றாலும் ஒரு விழுமியத்தை உருவாக்க தொடர்ந்து போராட வேண்டும் என்று நீ சொல்லியிருக்கிறாய்.
பள்ளிக்கு செல்லும் போது ஏதேனும் சண்டைகளோ, புகார்களோ எழுந்தால் அதை கௌரவமாக கையாள வேண்டும் என்று நீ எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறாய். நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் நீ எவ்வளவு அழுத்தம் கொடுப்பாய் என நினைவிருக்கிறதா? உன்னுடைய அனுபவம் தவறானது நான் கற்றுக் கொண்டவை எவையும், . இந்த நிகழ்வின் போது  எனக்கு கை கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் ஒரு கருணையற்ற கொலைகாரியாகவும், மனசாட்சியற்ற குற்றவாளியாகவும் தான் நான் தெரிந்தேன். நான் ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்கவில்லை. சட்டத்தை நம்பியதால் நான் அழுது புலம்பவில்லை.
ஆனால், குற்றம் புரிந்தவளானாலும் எதையும் கண்டுகொள்ளாதவள் போல காட்சியளித்ததாக என் மீது குற்றம் சுமத்த பட்டது. நான் கொசுவைக் கூட கொன்றது கிடையாது. கரப்பான்பூச்சிகளை அதன்  உணர்நீட்சிகளை பிடித்து வெளியில் தூக்கியெறிவேன் என்பது உனக்குத் தெரியும். ஆனால், இப்போது நான் திட்டமிட்டு கொலை புரிந்தவள். நான் மற்ற உயிரினங்களிடம் காட்டிய பரிவு கூட ஒரு பையனைப் போல நான் நடந்து கொண்டதற்கான அடையாளமாக மாறிப்போனது. சம்பவம் நடந்த போது நான் நீளமான விரல் நகங்கள் கொண்டிருந்ததைக் கூடநீதிபதி கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை.
நீதிபதிகளிடமிருந்து நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்குத் தான் எத்தனை நன்நம்பிக்கை. என்னுடைய கைகள் ஒரு விளையாட்டு வீராங்கனையின் கைகளை போன்றோ, குத்துச் சண்டை வீராங்கனையின் கைகளைப் போன்றோ இறுக்கமாக இல்லை என்பதைப் பற்றி அவர் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. எந்த நாட்டின் மீதான அன்பை நீ என்னுள் விதைத்தாயோ அந்த நாடு நான் தேவையென்று நினைக்கவில்லை. விசாரிப்பவர்களின் சித்திரவதைக்கு நான் அலறியபோதும், தகாத வார்த்தைகளை நான் செவியுற்ற போதும் யாரும் என்னை ஆதரிக்கவில்லை. என் அழகின் கடைசி கூறையும் நான் உதிர்த்த போது, என் தலைமுடியை  மொட்டையடித்த போது, எனக்கு 11 நாட்கள் தனிச்சிறை வாசம் என்ற பரிசு கிடைத்தது.,
அன்புள்ள ஷோலே, இப்போது நீ கேட்பவையை முன்னிட்டு அழாதே. காவல்துறை அலுவலகத்தில் முதல் நாள் விசாரணையின் போது திருமணமாகாத விசாரணை அதிகாரி ஒருவர் கைகளில் நகங்கள் வைத்திருந்ததற்காக என்னை அடித்தார். இந்த காலத்தில் அழகு வரவேற்கப்படுவதில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். தோற்றத்தின் அழகு, எண்ணங்களின் அழகு, ஆசைகளின் அழகு, அழகான கையெழுத்து, கண்களின், குறிக்கோளின் அழகு, குரலின் அழகு என எதுவும் இந்த காலத்தில் விரும்பப்படுவதில்லை.

என் அன்பு அம்மாவே, என் கருத்தாக்கம் மாறியிருக்கிறது. அதற்கு நீ பொறுப்பில்லை. என் வார்த்தைகள் முற்றுப்பெறாமல் நீண்டு கொண்டே இருக்கின்றன. அவற்றையெல்லாம் வேறொருவரிடம் கொடுத்துள்ளேன். உனக்குத் தெரியாமல், நீ அருகில் இல்லாமல் நான் கொல்லப்பட்ட பிறகு இவ்வார்த்தைகள் உன்னை வந்து சேரும். என் நினைவாக நிறைய கையெழுத்து பிரதிகளையும் உனக்காக விட்டுச் சென்றுள்ளேன்.

என்றாலும், என் இறப்புக்கு முன்னால் உன்னிடம் இருந்து எனக்கு உதவி தேவைப்படுகிறது. உன் முழு முயற்சியையும் போட்டு, இயன்ற எல்லா வழிகளையும் பின்பற்றி எனக்கு நீ இதை செய்து தர வேண்டும். சொல்லப்போனால் உன்னிடமிருந்தும், இந்த நாட்டிடமிருந்தும், இந்த உலகத்திடமிருந்தும் நான் கேட்பது இது மட்டும் தான். இதைச் செய்து முடிக்க உனக்கு நேரம் தேவைபப்டும் என்பதை நான் அறிவேன். அதனால் தான் என் உயிலின் ஒரு பாதியை உனக்கு முன்னமே சொல்கிறேன். தயவு செய்து அழாமல் கேள். என் சார்பாக நீதிமன்றத்தில் நீ இதைச் சொல்ல வேண்டும். சிறைச்சாலைக்குள்ளிருந்து இப்படி ஒரு கடிதத்தை எழுதி அதற்கு சம்மதம் பெற முடியாது. தலைமைக் காவல் அதிகாரி இதற்கு ஒப்புதலும் தர மாட்டார். அதனால், என்னை முன்னிட்டு நீ இன்னொரு முறை சிரமப்பட வேண்டும்.  என்னைத் தூக்கிலிருந்து காப்பாற்ற நீ யாரிடமும் கெஞ்சக் கூடாது என்று நான் சொல்லியிருந்தாலும்  நான் கேட்கப்போகும் இந்த விஷயத்திற்காக நீ யாரிடம் சென்று கெஞ்சினாலும் நான் எதுவும் சொல்லமாட்டேன்.

இரக்கம் நிறைந்த என் அம்மாவே, அன்பு ஷோலே, என் வாழ்க்கையை நேசிப்பது போல நான் நேசிக்கும் இன்னொரு உயிரே! மண்ணுக்குள் மக்கிப் போக எனக்கு விருப்பமில்லை. என் கண்களும், பிஞ்சு இதயமும் தூசியாகிப் போவதை நான் விரும்பவில்லை. என்னைத் தூக்கிலிட்ட அடுத்த கணமே என் இதயம், சிறுநீரகம், கண், எலும்புகள் என மாற்று அறுவை சிகிச்சைக்கு எதெல்லாம் பயன்படுமோ அவை அனைத்தையும் என் உடலில் இருந்து உடனடியாக எடுத்து தேவைப்படுபவருக்கு பரிசாக தந்து விட வேண்டும் என்று கெஞ்சிக் கேள். என் உடல் உறுப்புகளைப் பெறுபவர்களுக்கு என் பெயர் தெரிய வேண்டாம், எனக்காக அவர்கள் பூங்கொத்து வாங்கி வைக்க வேண்டாம், எனக்காக பிரார்தனை கூட செய்ய வேண்டாம். எனக்காக ஒரு கல்லறை அமைக்கபட்டு அதில் நீ வந்து அழுது புலம்ப வேண்டாம். எனக்காக நீ கருப்பு உடை அணிய வேண்டாம். என்னுடைய சிரமமான நாட்களை மறக்க முயற்சி செய். காற்றிடம் என்னைக் கொடுத்து எடுத்துப்  போகச் சொல்.

இந்த உலகம் நம்மை விரும்பவில்லை. என் விதியை அது விரும்பவில்லை. அதற்கு அடிபணிந்து இன்று நான் மரணத்தை தழுவுகிறேன். ஏனென்றால் கடவுளின் முன்னிலயில் நான் இந்த காவல்துறை கண்காளிப்பாளர்களின் மீது குற்றம் சுமத்துவேன். கண்காணிப்பாளர் ஷாம்லூ மீது குற்றம் சுமத்துவேன். நீதிபதியின் மீது குற்றம் சுமத்துவேன். நான் விழித்திருந்த போதே என்னை அடித்துத் துன்புறுத்திய, என் மீது கொடுமைகளை கட்டவிழ்த்த இந்த நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றம் சுமத்துவேன். நம்மை படைத்தவனின் முன்னிலையில் நான் டாக்டர் ஃபார்வந்தியின் மீது குற்றம் சுமத்துவேன். காசீம் ஷபானி உட்பட, தங்கள் அறியாமையாலும், பொய்களாலும் எனக்கு தவறிழைத்த என் உரிமைகளை நசுக்கிய, உண்மை சில நேரங்களில் மாறுபடும்  என்பதை கண்டுகொள்ளாமல் இருந்த அனைவரின் மீதும் குற்றம் சுமத்துவேன்.

மென்மையான இதயத்தைக் கொண்ட அன்பு ஷோலே, அந்த உலகத்தில் நாம் தான் குற்றம் சுமத்துபவர்கள். மற்றவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள். கடவுளுடைய சித்தம் என்னவென்று பார்ப்போம். நான் சாகும் நொடி வரை உன்னைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். உன்னை அதிகம் விரும்புகிறேன்.

ரேஹானே

இணைந்து வாழ்தல் ஒரு அழகான அனுபவம்.

பெண்களை மதிப்பது என்பது, மறுப்பு தெரிவிக்கும் உரிமை உட்பட, அவர்களது அனைத்து உரிமைகளையும் மதிப்பது. திருமணமின்றி இணைந்து வாழ்தல் பற்றிய அகில் பாரத்திய வித்யார்த்தி பரிஷத்(ஏ பி வி பி) ன் விமர்சனத்துக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி கூறுவது.

பெண்கள் மீதான அடக்குமுறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பு திருமண உறவின்றி சேர்ந்து வாழும் வழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கினர். இது போன்ற உறவுகள் “இந்திய கலாச்சாரத்திற்கும், குடும்ப முறைக்கும் எதிரானவை,” என தில்லி பல்கலைக்கழகத்தில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்திய ஏபிவிபி களப்பணியாளர்கள் கூறினர்.

“இது போன்ற உறவுகள் வெற்றிபெறுவதில்லை என்பதும் உண்மை,” என்று ஏபிவிபி-யின் தில்லி செயலாளர் சாகேத் பஹூகுனா இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு தெரிவித்ததார். “நாங்கள் கல்லூரிகளில் குழுக்களை ஏற்படுத்தி இது போன்ற உறவுகளில் ஏற்படும் சிரமங்களைப் பற்றி மாணவிகளுக்கு எடுத்துச் சொல்லப்போகிறோம்.”

ஆகஸ்ட்டு மாதம் லக்னோவில் நடைப்பெற்ற பெண்களுக்கான தேசிய அளவிலான பயிற்சி பட்டறையில் “மணவுறவின்றி சேர்ந்து வாழ்தல்” குறித்த விவாதித்தாக ஏபிவிபி-யின் தேசிய செயலாளர் ரோஹித் சஹாஹல் தெரிவித்தார்.

சஹாலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அபர்ணா மகியராஜா கீழ் கண்ட கடிதத்தை அவருக்கு அனுப்பியுள்ளார்.

திரு சஹால்,
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார்.நானும் அவரும் சேர்ந்து வாழ்கிறோம். வீட்டு வேலை செய்யத் தெரிந்தவர் அவர். அவ்வேலைகளை என்னுடன் பகிர்வது கொள்கிறார். அதுமட்டுமின்றி எல்லா பிரச்சனையான,இக்கட்டான சூழல்களிலும் நாங்கள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கிறோம். ஒரு நாளின் முடிவில் (அது எத்தனை மணியானாலும் சரி) அவரிடம் திரும்பி வருவது ஒரு அழகான உணர்வு.

ஆர். எஸ். எஸ் களப்பணியாளர்களைக் கொண்ட குடும்பம் என்னுடையது. நான் பிஏ படித்து முடித்தவுடன் அவர்கள் தேர்நதெடுத்த (ஒரே சாதி/ மத்தத்தைஸ் சேர்நதவருக்குத் தான்) ஒருவருக்கு என்னைத் திருமணம் செய்து வைக்க விரும்பினர். நான் மேலும் படிக்க வேண்டும் என்ற காரணத்தை வலியுறுத்திக் கொண்டே இருந்தாலும் திருமணத்தின் “தேவையைப” பற்றி அடிக்கடி பேசி நிம்மதியாக படிக்க கூட முடியாதபடி செய்கிறார்கள்.

பெண்களுக்கு உரிய மரியாதையைக் கேட்கும் உங்கள் களப்பணியாளர்களின் போராட்டத்தைப் பற்றி இப்போது தான் செய்தித் தாளில் வாசித்தேன். பெண்களை மதிப்பது என்பது அவர்களுக்கு தேவையானவற்றை மற்றவர்கள் தேர்ந்தெடுப்பது என்பது கிடையாது. பெண்களை மதித்தல் என்பது அவர்களின் தெரிவுகளை மதித்தல். மறுப்பது தான் அவர்களது தெரிவு என்றால் அதையும் மதித்தல். பெண்கள், மனிதர்களாக பிறநததாலேயே பகுத்தறிந்து பார்க்கும் தன்மை கொண்டவர்கள்.திறன் கொண்டவர்கள். பெண்களை மதிப்பதாக நினைக்கும் எவர் ஒருவரும் , பெண்கள் முடிவுகள் எடுக்கும் திறன் கொண்டவர்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

என்னுடைய இந்த உறவு முறிந்து போனாலும் கூட அது என் வாழ்க்கையின் அந்தமாக ஆகிவிடாது. உங்களுடைய ஆணாதிக்க உலகத்தில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். எனக்கு அது பெரிய விஷயம் இல்லை ஏனென்றால் என் துணையாக நான் தேர்ந்தெடுக்கும் ஆணை பொறுத்து என் அடையாளம் நிர்ணயிக்கபடுவதில்லை. உறவை முறித்துக் கொள்வது என்னுடைய முடிவாகவுமிருக்கலாம். அதே போல என் உறவின் வெற்றித் தோல்வியை கையாள்வது என்னுடைய பிரச்சனை,உங்களுடையது அல்ல. இணைந்து வாழ்தல் ஒரு அழகான அனுபவம். காதல் செய்தல் ஒரு அழகான அனுபவம்.

இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? என் நண்பர் ஒரு இஸ்லாமியர் . நாங்கள் இருவருமே மத நம்பிக்கையற்றவர்கள். எங்கள் உறவு எந்த மதத்தையோ, சாதியையோ சார்ந்ததாக இல்லை. இதெல்லாம் உங்களுக்கு கொஞ்சமும புரியாதில்லையா?

பி.கு. சில நேரங்களில் நாங்கள் எங்களுக்கான மதுபானத்தை கலந்து கொண்டு, எங்கள் பால்கனியில் அமர்ந்து பல மணிநேரம் பேசிக் கொண்டிருப்போம். அதே நேரம் உங்களுடனான, உங்களைப் போன்றோருடனான( என் பெற்றோரையும் சேர்த்து தான் சொல்கிறேன்) போராட்டமும் மறுபுறம் ந டந்து கொண்டே தான் இருக்கிறது.

சாஹில் குரேஷியின் மீதான தீராத காதலுடன்.

அபர்ணா மஹியர்ஜா

புறக்கணிப்பால் ஒடுக்கப்பட்டவர்கள்: (அமெரிக்க) உள்நாட்டு போரில் ஆண் வேடம் பூண்டு போராடிய பெண் படைவீரர்கள் – மரியா பபோவா

“பெண்கள், கிருமிகள் நிறைந்த முகாம்களில் வாழ்ந்தார்கள், கொடுமையான சிறைகூடங்களில் தவித்திருந்தார்கள், துயரமான முறையில் இறந்து போனார்கள், ஆனால் சக ஆண்களை போல தங்கள் நாட்டுக்காக, கௌரவமாக.”

வழக்கமான விவரணனங்கள் (அமெரிக்க) உள்நாட்டு போரை ஆணினது போராய் கட்டமைத்திருக்கின்றன.1860 களின் வரலாற்று பதிவுகள் கூட ஆண்கள் யாங்கிகளாகவும், ரிப்ஸாகவும் பிரிந்து போரிட்டதை தான் பேசுகின்றன. பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இது போன்ற வரலாற்று பதிவுகள், மாற்றியமைக்கப்பட்ட வரலாறுகள் பெண்கள் அக்காலத்தின் அசாத்தியமான தடைகளைத் தாண்டி போர்களத்தை அடைந்த கதைகளை தவிர்த்து விடுகின்றன.
(They Fought Like Demons: Women Soldiers in the Civil War (public library),DeAnne Blanton and Lauren M. Cook)
“அவர்கள் பேய்களை போல போரிட்டார்கள் (பொது நூலகம்) என்ற நூலில், வரலாற்று ஆசிரியர்கள் டிஆன் ப்ளாண்டன் மற்றும் லாரன்.எம்.குக் ஆகியோர் யூனியன் மற்றும் கான்ஃபிடரெட் படைகளின் அணிவரிசையில் ஆண்களாக வேடம் பூண்டு பணியாற்றிய 250 பெண்களின் பதிவுகளை கால வரிசைப்படுத்தி, சூழ்நிலைப் பொருத்தமும் செய்திருக்கிறார்கள். ”உள்நாட்டுப் போர் வரலாற்றில் சிறப்பாக காக்கப்பட்ட ரகசியம்” ஆன இது புரட்சிகரமானதும், தேசபற்று மிகுந்ததுமாகும். அந்தக் காலத்தில் பெற முடியாததாக இருந்த ஆண்களுக்கான சமூக அடையாளத்தை நாட்டின் குடிமக்களாக தங்கள் முழு தகுதியயை கோரி பறித்துக் கொண்டு, ஆண்களுக்கான சுதந்திரத்தை அடைய துணிந்தார்கள். ப்ளாண்டனும், குக்கும் முன்னுரையில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்கள்: ”அமெரிக்க உள்நாட்டு போரில் பெண்கள் தன்னலமற்ற செவிலிகளாகவும்,காதல் உணர்ச்சிமிக்க ஒற்றர்களாகவும்,கணவன் இல்லாத குடும்பத்தை வழிநடத்திய துணிச்சலாம பெண்காளாக மட்டுமே அறியப்பட்டார்கள். இப்படி பாரம்பரியமான பாலின பொறுப்புகளை வைத்து வடிக்கப்படும் இந்த சித்திரம் கதையை முழுமையாக சொல்பவை அல்ல. போருக்கு ஆண்கள் மட்டுமே வீறுநடை போட்டு செல்லவில்லை. பெண்களும் கையில் ஆயுதம் ஏந்து போருக்கு புறப்பட்டார்கள். கிருமிகள் அடர்ந்த முகாம்களில் பெண்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மோசமான சிறைகளில் அல்லல்பட்டிருக்கிறார்கள். துர்மரணங்கள் அடைந்திருக்கிறார்கள். ஆயினும் கௌரவமாக, தன் நாட்டிற்காக, சக ஆண்களைப் போல…

(தன் கணவரோடு ‘ஜாக் வில்லியம்ஸ்’ என்ற பெயரில் இராணுவத்தில் சேர்ந்த யூனியன் இராணுவ வீரர் பிரான்சஸ் லூயிசா க்ளேடன் ஆணாக தன்னைக் காட்டிக் கொள்ள சூதாட்டம், சிகார் புகைப்பது, கெட்ட வார்த்தையில் திட்டுவது ஆகியவற்றை கற்றுக் கொண்டிருந்தனர். Courtesy of the Trustees of the Boston Public Library)

(சாரா எட்மண்ட்ஸ் சீல்ய், அதிகம் பதிவு செய்யப்பட்ட இராணுவ பெண். யூனியன் படையில் இரண்டு வருடங்கள் பிராங்கிளின் தாம்ஸன் என்ற பெயரில் இருந்தவர். போர் முடிந்த அடுத்த 25 ஆண்டுகௌக்கு அந்த பெயரிலேயே இராணுவ பென்ஷன் வாங்கிக் கொண்டிருந்தவர். Courtesy of the Trustees of the Boston Public Library)

பெண்கள் ஏன் இதைச் செய்தார்கள்? சிலருக்கு, சக ஆண்களைப் போல, நாட்டின் மீதான பற்று இதைச் செய்ய தூண்டியது. மற்றவர்கள் காதலுக்காக…போர்களத்தில் இருக்கும் கணவனுக்கு, காதலனுக்கு, தகப்பனுக்கு, வருங்கால கணவனுக்கு, சகோதரனுக்கு அருகிலிருக்க. ஆயினும் பலரும் பொருளாதார காரணங்களுக்காக செய்தார்கள். படை வீரன் ஒருவர் ஒரு மாதத்திற்கு 13 டாலர்கள் சம்பாதித்தார். இந்தத் தொகை தையல் தொழிலாளியாகவோ, துணி துவைப்பவராகவோ, பணிப்பெண்ணாகவோ சம்பாதிக்ககூடிய தொகையை விட ஏறக்குறைய இரு மடங்கு அதிகமாக இருந்தது.

உள்நாட்டு போரின் போது, வாக்குரிமை இல்லாமல் இருந்த பெண்களுக்கு, வங்கிக் கணக்குகள் இருந்தது கிடையாது. அப்பொழுதும், பெண்கள் என்றால் வீட்டை பராமரித்துக் கொண்டும், தாய்மைபேற்றை அடைந்து கொண்டும் இருக்க வேண்டும் என்ற வரையறைகளுகுள் சிக்குண்டு இருந்தார்கள். பெண்களுக்கென தனியாகவோ, அரசியல் ரீதியாகவோ எந்த ஆதரவும் இருக்கவில்லை அப்போது. உண்மையில், இந்த பெண் படை வீரர்கள் – இடம் பெயர்ந்தவர்கள், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், வயலில் வேலை பார்த்த பெண்கள், வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்த பெண்கள் என- ஒடுக்கப்பட்ட குழுக்களிலிருந்து வந்தார்கள். தங்களுக்கான பணத்தை தானே சம்பாதித்து செலவழிக்க கிடைத்த, அதுவரை கிடைத்திராத, சுதந்திரம் தனிப்பட்ட விதத்தில் என்றாலும் கூட சமூக வாய்புகளை கொடுத்ததின் மூலமும், உரிமைகளை கொடுத்ததன் மூலமும் அவர்களை அதிகாரமுள்ளவர்களாக மாற்றியது என்று ப்ளாண்டனும், குக்கும் எழுதுகிறார்கள். மேலும் எழுதுகையில்: சமூகம் பெண்கள் மீது மேலதிகமான தடைகளை விதித்தது. மேல் தட்டு வர்க்கத்திலிருந்த பெண்களும், நடுத்தர வர்கத்தில் கல்வியறிவு பெற்றிருந்த பெண்களும் ஆசிரியர்களாக, எழுத்தாளர்களாக, வீட்டு மூத்த பராமரிப்பாளர்களாக பணியாற்றியதன் மூலமு சிறிதளவேனும் சுதந்திரத்தை கண்டடைந்த போது, பாட்டாளி மற்றும் கீழ் தட்டு வர்க்க பெண்களுக்கு மண உறவுக்கு வெளியே ஏற்புடைய வெகு சில தெரிவுகளே இருந்தன. அவர்களுக்கான வேலைகள் கூட தையல் தொழில், பாலியல் தொழில் அல்லது வீட்டு வேலை என்ற அளவிலேயே அடங்கி போனது. அப்போதைய கணக்கெடுப்புகளின்படி திருமணமாகாத பாட்டாளி வர்க்க பெண்கள் இறுதி தெரிவையே கையெடுத்தனர். 1860ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் வீட்டு பணிப் பெண்களின் ஒரு மாத சம்பளம் 4 டாலர்களிலிருந்து 7 டாலர்களாக இருந்தது. “நல்ல” சமையல் பெண்கள் 7 அல்லது 8 டாலர்கள் சம்பாதித்தார்கள். துணி துவைப்பவர்கள் ஒரு மாதத்திற்க்கு 10 டாலர்கள் வரை சம்பாதித்திருக்கக் கூடும். அதே நேரம், யூனியன் படைகளில் பிரைவேட்டாக 3 மாதம் வேலை பார்த்தாலே 39 டாலர்கள் கிடைக்கும். அந்த காலத்தில் இளைஞர்களுக்கு கிடைத்து கொண்டிருந்த மாத வருமானமான 10 – 20 டாலர்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் இது மிகப் பெரும் தொகை.

(யூனியன் இராணுவ படையணி வீரர் ஆல்பர்ட் காஷியர். உண்மையில் இவர் ஜென்னி ஹாட்ஜர்ஸ். உள்நாட்டு போரில் பல சண்டைகளில் ஈடுபட்டவர். 1913ஆம் ஆண்டு, வயதான போர் வீரர்கள் தங்கும் இல்லத்தில் பெண்ணென கண்டுபிடிக்கப்பட்டு தலைப்புச் செய்தியில் இடம் பிடித்தார்.
Courtesy of the Trustees of the Boston Public Library)

பெண்கள் என்று கண்டுபிடிக்க பட்ட உடனேயே இந்த பெண் படைவீரர்கள் “பிறவி விநோதங்கள்”, “பாலியல் பொருத்தப்பாடு இல்லாதது” அல்லது “பெண் என்பதற்கான உறுதியான சான்று” என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் படையிலிருந்து அனுப்பப்பட்டாலும், இவர்களில் பெரும்பான்மையினர் கொஞ்ச காலத்திற்காவது சந்தேகத்துக்கு ஆளாகாமல் இருந்து விடுவார்கள். பாலினத்தை உறுதி செய்ய ஒரே வழியான நிர்வாணத்திற்க்கு அந்த (விக்டோரியன்) சமூகத்தில் முற்றிலும் இடமில்லையென்பதாலும், குளிப்பதே அபூர்வமென்பதாலும், உடைகளுடன் உறங்குவதே வழக்கமாக கொண்டிருந்ததாலும் இப்பெண்களை அடையாளம் காண முடியாமல் போனது. (ஆனால், இன்றைக்கு இராணுவத்திற்குள் நடக்கும் பாலியல் வன்முறை பற்றிய விஷயங்கள் வெளிவரத் தொடங்கியுல்ள நிலையில், இனம் கண்டுகொள்ளப்பட்ட இந்த பெண்கள் விஷயத்தில் என்ன நடந்திருக்கும் என்று எண்ண வேண்டியிருக்கிறது.)”

அப்போதைய இராணுவ உடைகள் தொள தொள- வென இருந்ததாலேயே சில பெண்களால் அவர்களது கர்ப்பத்தை கூட பிள்ளை பெறும் கடைசி நிமிடம் வரை படையணியின் ஆண்களிடமிருந்து மறைத்துவிட்டு இறுதியாக பிள்ளை பெறும் தருணத்தில் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க முடிந்தது. இன்னும் சிலர், போர் முடிந்ததன் பிறகும் ஆண்களாகவே உடையணிவதை தொடர்ந்தனர். இது பாலின அடையாளம் தொடர்பான கேள்விகளை எழுப்பியது. அது இந்தப் புத்தகத்தின் விவாதிக்கப்படவில்லை. இதில் சுவாரஸ்யமான விஷயமே பெண்களுக்கு இந்த யோசனை தோன்றியது எப்படி என்பது தான். இப்பெண்களின் இந்த முடிவுக்கான கலாச்சார பாதிப்பு விக்டோரியன் இலக்கியத்தில் வரும் எதிர் பாலின உடையணியும் கதாநாயகிகளிடமிருந்தும், 17ஆம் நூற்றாண்டின் கவிதைகளிலும், நாவல்களிலும் கொண்டாடப்பட்ட இராணுவத்திலிருந்த பெண்கள் மற்றும் பெண் மாலுமிகளிடமிருந்தும் வந்திருக்கலாம் என்பது ப்ளாண்டனின் கருத்து.

திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நிற்க மறுத்த குற்றத்திற்காக “தேசத் துரோக” குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சல்மான், பிணையில் வெளிவந்த பிறகு கொடுத்த பேட்டியின் சிறு பகுதி தமிழில்.

Salmaan: நான் ஒரு அனார்கிஸ்ட். என்னைப் போன்ற ஒருவனை 25 நாட்கள் பாகிஸ்தான் உளவாளி என்று சொல்லி சிறையிலடைத்திருக்கிறார்கள். நான் ஏன் ஒரு சீன உளவாளி இல்லை? நான் ஒரு பாகிஸ்தான் உளவாளியாக ஏன் கருதப்படுகீறேன்? என்னுடைய மதத்தினால்.

பேட்டி எடுப்பவர்: இதனால் நீங்கள் பாதிக்கப்பட்டீர்களா? பொது மக்கள் உங்களைப் பற்றி தவறாக நினைப்பார்கள் என எண்ணி வருத்தப்பட்டீர்களா?

சல்மான்: பொது மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கL என்பது பற்றி எனக்கு கவலையில்லை. என்னுடைய ஃபேஸ்புக் பக்கம் தான் என் செய்தி. என்னுடைய அரசியல் நிலைப்பாடுகளை அங்கே நான் தெளிவாக முன்வைத்துள்ளேன். என் வீட்டுக் கதவை இரவு பன்னிரெண்டு மணிக்கு தட்டி என்னை கூட்டிச் சென்றார்கள். என்ன ஜனநாயகம் இது?

பே.எ: அதாவது, பகலில் அவர்கள் உங்களை அழைத்திருந்தால் நீங்களே சென்றிருப்பீர்கள் என்று சொல்ல வருகிறீர்களா?

சல்மான்: கண்டிப்பாக

பே.எ: நீங்கள் மத்தத்தை நம்பாதவர் என்றும், பகுத்தறிவுவாதி என்றும் உங்கள் தந்தை சொல்கிறாரே?

சல்மான்: நான் பகுத்தறிவாளன் கிடையாது. நான் ஆத்திகன். கேரளாவின் பகுத்தறிவாளர்கள் எல்லாம் இஸ்லாமியர்களைப் பார்த்து அஞ்சுபவர்கள். நான் பகுத்தறிவாளனோ சமயச் சார்பற்றவனோ கிடையாது. நான் நாத்திகன். நாத்திகமும் பகுத்தறிவும் ஒன்று கிடையாது. இவை இரண்டு வெவ்வேறு விஷயங்கள். நான் ஒரு நாத்திகனும், இஸ்லாமியனும் ஆவேன்.

பே.எ: இந்த சிறைப்படுத்துதல் உங்களுக்கு என்ன கற்று கொடுத்திருக்கிறது?
சல்மான்: சிறை வாழ்க்கை அற்புதமானது. சிறைப்படுத்துதல் என்பது ஒரு ஓண்டோலாஜிக்கல் வன்முறை. தவறுகளே செய்யத பல பேர் பிணைக்கு பணமில்லாததால் சிறைச்சாலைகளில் இருக்கிறார்கள். “திருடர்கள்” என்று சொல்லப்படுபவர்கள் தேசிய அடையாளங்களை கண்டுகொள்வதில்லை.அவர்களுக்கு என்னைப் போன்றவர்களை பிடிக்கிறது. எல்லோரிடமும் விடைபெற்று வருவதற்கு தான் கால தாமதமாகி விட்டது. ”அடுத்த எப்பபோது சந்திப்போம் சல்மான்?” என்று கேட்கின்றனர்.

பே.எ: சிறைக்குள் இருப்பவர்கள் வெளியில் இருப்பவர்களை விட மேன்மையானவர்கள் என்ற முடிவுக்கு வந்து விட்டீர்களா?

சல்மான்: இது போன்ற ஒப்பீட்டை செய்யவே முடியாது. வெளியிலும் “நல்லவர்கள்” இருக்கிறார்கள்.

வின்செண்ட் வான் கோ

Van_Gogh_-_Frau,_im_Gras_sitzend.jpeg

நேர்மையானவர்கள் கலைத் துறையில் நீடித்திருக்க வேண்டியது மிக மிக அவசியம் என்பது உனக்குத் தெரியுமா?  அழகான படைப்பின் ரகசியம் அதை வழிநடத்தும் உண்மையிலும், உள்ளார்ந்த உணர்விலும் தான் இருக்கிறது என்பது பலருக்கு தெரிவதில்லை.